கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் அதனதன் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் விதமாக காட்டமாக வாசகங்களை அச்சிட்டு போஸ்டர்கள் ஒட்டும் கலாச்சாரம் பெருகி வந்தது. இதனால், பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நடந்துள்ளது. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ள போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என போலீசார் எச்சரித்திருந்தனர். மீறி ஒட்டினால், போஸ்டரில் இருக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் அச்சிட்ட அச்சக உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் கடுமையாக எச்சரித்திருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தது. இதனால், அங்கு பெருகி வந்த அரசியல் விமர்சன போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் ஒரு வழியாக குறைந்தது. இப்படியே சில மாதங்கள் அமைதியாக சென்றது. ஆனாலும் அவ்வப்போது சில போஸ்டர்கள் கோவை மாநகரில் ஒட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிக்கும் விதத்தில் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். இதற்கு யாரும் பதில் போஸ்டர்கள் ஒட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சிக்கும் விதத்தில் கோவை வீதியெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது எனக் கூறும் வகையில் வாசகங்கள் உள்ளன. அதாவது, பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலின் போதும் அழகாக பேசி, ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், இந்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றமாட்டார் எனவும் விமர்சிக்கும் கட்சிகள், இவ்வாறு கூறப்படும் பொய்களை மோடி வாயால் வடை சுடுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்துகொண்டு கைகளில் வடைகளை எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தனர். இப்படி தமிழகமெங்கும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள், அவரை நன்றாக வடை சுடுபவர் என்றே பிரச்சாரம் செய்கின்றனர். இந்த பாணியில் தற்போது கோவையிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்தப் போஸ்டரில் பிரதமர் மோடியைச் சுற்றி நிறைய வடைகள் போட்டு, கருப்பு பணம் மீட்பு என்பது ஒரு வடை எனவும், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்பது ஒரு வடை எனவும் இப்படி பல்வேறு வடைகளை பிரதமர் மோடி சுட்டுள்ளார் என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வடைகளின் பட்டியலில் அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய், உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்காதது என ஏராளமான நிறைவேறாத திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு அச்சிடப்பட்ட போஸ்டர்கள் கோவையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர்கள் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேல் தனது கால் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு இரண்டிலும் ஒன்றுமில்லை... என வெளியே எடுத்துக்காட்டும் புகைப்படத்தை அச்சிட்டு ஒவ்வொரு வடையாக விளக்கி கூறியிருக்கும் இந்தப் போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவினர் திமுக ஆட்சியை குடும்ப ஆட்சி என விமர்சித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஆமாம் குடும்ப ஆட்சி தான். தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி" என தமிழக அரசின் நான் முதல்வன், உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள மகள், மகன், அம்மா உள்ளிட்டோருக்கு தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையில், கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை படம் பிடித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்தப் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.