தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மீண்டும் மும்பையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். 13 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை கொடுத்துள்ளோம். அதில் துறை வாரியாக 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொடுத்தது குறித்து தெரிவித்துள்ளோம். அந்த வெள்ளை அறிக்கை இல்லை என்று அவர்களால் சொல்ல முடியும். இந்தியாவிலேயே மத்திய அரசின் பணம் அதிகம் வந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களே இந்தியா கூட்டணியில் முன்னாடி நிற்கிறார்கள். கடந்த ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று சொன்ன டி.ஆர். பாலு 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் ஒருவராக இருக்கிறார். அதேபோல், உத்தவ் தாக்கரே, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களின் மகன்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டணி.
விமானத்தில் வரும்போது இந்தியா டுடே பத்திரிகையின் கருத்துக் கணிப்பை பார்த்தேன். அதில், 2024ல் 317 இடங்களை பாஜக கைப்பற்றும் எனச் சொல்லியுள்ளது. அதனால், அதன் மேல் எனக்கு கோபம். 2019ல் 303 இடங்களை வென்றோம். ஆனால், நாங்கள் 400 இடங்களை வெல்வோம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். காரணம் அந்த அளவிற்கு மக்களின் அன்பும் ஆதரவும் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸுக்கு 62 இடங்கள் வெல்லும் என்று சொல்லியுள்ளது” என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் அதிகாரிகளின் வேலை சுமை குறையும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும். இதனை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகளாகவோ அல்லது குடும்ப ஆட்சியை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஒரு கட்சியை பிரித்துதான் பா.ஜ.க. வளர வேண்டும் என அண்ணாமலைக்கோ அல்லது பா.ஜ.க.வுக்கோ நோக்கம் இல்லை. ஒரு கட்சியைப் பற்றி நான் எப்போதும் தவறாக பேசமாட்டேன். வளர வேண்டும் என்றால் நம் முயற்சியில் வளர வேண்டும் என்று நினைப்பேன். நான் சொல்லாத விஷயங்கள் எல்லாம் செய்தியாக வருகிறது. நான் நேரடியாக கருத்து சொல்லக் கூடியவன்; நான் எப்போதும் பின்னாடி பேசும் ஆள் இல்லை.
இந்தத் தேர்தல் முறையில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறது என்றால், 1952ல் முதல் தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தது. அதேபோல், 1957, 1962 மற்றும் 1967ல் நடந்தது. அப்போது எல்லாம் எதிர்க்கட்சிகள் தூங்கிக் கொண்டிருந்ததா? 67 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் தான் இருந்தது. காங்கிரஸ் 105 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்த பிறகு தான் இந்த குழப்பமே வந்தது. அவர்களும் கூர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்தை படித்துவிட்டு ஒப்புதல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பேசினார்.