
பா.ஜ.க. தமிழக தலைவர் முருகன், தமிழர் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு தரிசனம் செல்லும் வகையில் வேல்யாத்திரை நடத்தவுள்ளதாக அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி முடியும் வகையில் பயண திட்டம் அறிவிக்கப்பட்டது.
இது வேல்யாத்திரையல்ல, அரசியல் யாத்திரை. இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் மத மோதல் ஏற்படுத்த துடிக்கிறார்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, கரோனாவை காரணம் காட்டி அனுமதி தரவில்லை.
அனுமதி வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது பாஜக, அனுமதி தரக்கூடாது என சிலர் மனு தாக்கல் செய்தனர். இரண்டு மனுக்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறியது நீதிமன்றம். தமிழக காவல்துறை, அனுமதி வழங்க முடியாது எனச்சொல்லியது.
இந்நிலையில் திட்டமிட்டபடி காவல்துறை அனுமதியில்லாமல் கடந்த நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில், பாஜக தலைவர் முருகன் வேல்யாத்திரையை தொடங்க, கைது செய்யப்பட்டு, ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்து, பின்னர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விடுவித்தனர். தினம் ஒரு முக்கிய நகரத்தில் வேல்யாத்திரை நடத்த முயல அங்கு கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வேல்யாத்திரைக்கு விடுமுறை அளித்திருந்தது பாஜக.
நீங்கள் வேல் யாத்திரை நடத்துங்கள், நாங்கள் கைது செய்வது போல் கைது செய்து விடுவிக்கிறோம், மீண்டும் மறுநாள் அதேபோல் யாத்தரை நடத்துங்கள், கைது செய்து பின் மாலை விடுவிக்கிறோம் என தமிழகத்தை ஆளும் அதிமுகவும் – பாஜகவும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என எதிர்கட்சிகள் பலவும் குற்றம் சாட்டுகின்றன. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போலவே தமிழக காவல்துறையும் – தமிழக பாஜகவும் நடந்துக்கொள்கின்றன.
நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை நகரில் இருந்து பாஜக தலைவர் முருகன், வேல்யாத்திரை நடத்துவதாக கூறியுள்ளார். அதற்காக நகரம் முழுவதும் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி, கொடிகள் நட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று 17.11.2020 ம் தேதி திருவண்ணாமலையில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்த இருக்கும் வேல் யாத்திரையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நாகராஜன் ஐ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி, ஐ.பி.எஸ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் உட்பட மொத்தம் 1,195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என அறிவித்துள்ளனர்.
வேல் யாத்திரைக்கு அரசாங்கமோ, காவல்துறையோ அனுமதி தரவில்லை. மத்திய – மாநில அரசுகளின் கரோனா கால விதிமுறைகளின்படி, மத, அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அப்படியிருக்க திருவண்ணாமலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், முன்கூட்டியே கைது செய்ய முகாந்திரம் இருந்தும் அதனை செய்யாமல் 1,000த்திற்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வேல்யாத்திரை தொடங்கி சிறிது தூரம் சென்றபின் கைது செய்வோம் என்பதை பொதுமக்களும் நாடகமாகவே காண்கிறார்கள்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய எதிர்கட்சியினர்.