ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை.
இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் முடிந்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயண் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் போட்டியிடுகிறோம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், அது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தலைமை முடிவு செய்யும்.
ஒரு தரப்பு எங்களிடம் ஆதரவு கேட்டனர். இன்னொரு தரப்பு எங்களுக்கு ஆதரவு தருகிறேன் எனச் சொன்னார்கள். ஓரிரு தினங்களில் இவை அனைத்தையும் குறித்து ஆலோசித்து அறிவிப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் நிச்சயம் இருப்பார். பாமக போட்டியிடவில்லை. எனவே அதை விட்டுவிடுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் குறித்து 2 நாட்களில் சொல்கிறோம்.
எங்களுக்காக அதிமுக காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். காத்திருக்கட்டும். அதனால் என்ன? தவறில்லை. திமுகவிற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் நடந்து கொண்டு தான் உள்ளது. வீடு வீடாக பாஜக போய்க்கொண்டு தான் உள்ளது” எனக் கூறினர்.