சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த ஒன்றியம் திமுக வசமானது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் மொத்தம் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த 2019 டிசம்பரில் நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக சார்பில் 7 கவுன்சிலர்களும், இதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் 6 பேரும், 5 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், கடந்த காலங்களில் பெரும்பாலும் அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நேரடி தேர்தல் மூலம் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு அப்போது மறைமுகத் தேர்தல் நடந்தது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க திமுக, அதிமுக இருதரப்பிலும் கவுன்சிலர்களை இழுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தன. மறைமுக தேர்தலின்போது அதிமுகவுக்கு மெஜாரிட்டி இருந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஏ.பி.மணியின் மனைவி பார்வதி ஒன்றியக்குழுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி துணைத்தலைவர் ஆனார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் சுயேச்சைகள், அதிமுகவைச் சேர்ந்த சிலர் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். ஏற்கனவே திமுகவுக்கு 12 கவுன்சிலர்களின் ஆதரவு இருந்துவந்தது. புதிதாக அதிமுகவைச் சேர்ந்த சாந்தி பெருமாள், சத்யா மகேந்திரன், பரமேஸ்வரன், உமாராணி ஆகிய நான்கு பேர் திமுகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து திமுகவின் பலம் 16ஆக உயர்ந்தது. இதையடுத்து அவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர் பார்வதி மணிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ கடிதமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோரிடம் நேரில் சமர்ப்பித்தனர். இதையடுத்து கடந்த பிப். 20ம் தேதி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 16 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தலைவர் உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள் வாக்கெடுப்புக்கே வரவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் திமுக வசமாகி உள்ளது.
ஓரிரு மாதத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்படும். அதுவரை துணைத்தலைவரான புவனேஸ்வரி, தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். புதிய தலைவராக அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமாரின் மனைவியும் கவுன்சிலருமான ஹேமலதா தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார் கூறுகையில், ''கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தலைவர் தேர்தலுக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. அப்போது திமுக கூட்டணி சார்பில் 10 கவுன்சிலர்களின் ஆதரவுடன் தேர்தலில் கலந்து கொண்டோம். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து ஒரு வாக்கை தில்லுமுல்லு செய்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு இளங்கோவன் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் தேர்தல் அதிகாரிகள் முந்தைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டு, அதிமுகவைச் சேர்ந்த பார்வதி மணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
பார்வதியின் கணவர் ஏ.பி.மணி மீது சந்தனக்கட்டை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றப்பின்னணி கொண்ட அவரைப் போன்ற சமூக விரோதிகள், இப்போது முதல்வரின் ஆட்சியில் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகத்திறன், நல்லாட்சியைக் கண்ட அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேர் திமுகவுக்கு புதிதாக ஆதரவு அளித்தனர். அதையடுத்து எங்கள் பலம் 16ஆக உயர்ந்தது. அதன்பேரில் ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
கடந்த ஆட்சியின்போது திமுக கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்காமல் பாரபட்சமாக நடந்து கொண்டனர். இப்போது அப்படியான பாரபட்சம் இல்லை. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த 4 கவுன்சிலர்களுக்கு தலா 50 லட்சம் தருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆசைவார்த்தை காட்டப்பட்டது. அதையெல்லாம் தாண்டி, முதல்வரின் செயல்பாடு, நல்லாட்சி காரணமாக அவர்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்'' என்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தம் உள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் நான்கு பங்கினரின் ஆதரவு தேவை. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மொத்தம் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். மெஜாரிட்டியை நிரூபிக்க 15.2 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுகவுக்கு 16 பேரின் ஆதரவு முழுமையாக உள்ளது. இதனால் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுகவுக்கு எந்த தடையும் இல்லை.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவினர் வெற்றி பெற்றதை அடுத்து விஜயகுமாருக்கும், அவருடைய மனைவி ஹேமலதாவுக்கும் சக கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மாலை, சால்வைகள் அணிவித்தும், வீரவாள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.