கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி பலவீனமாக இருந்த தொகுதிகள் மற்றும் படுதோல்வியைச் சந்தித்த தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது பா.ஜ.க. தலைமை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அந்தத் தொகுதிகளில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் தங்கள் கட்சியின் பலத்தைக் கூட்ட வேண்டும் என்று நினைக்கிறது.
இதுபோன்ற தேர்தலை உத்தேசித்து எதிர்க்கட்சிகளை இப்பவே ஒடுக்க மோடி அரசு ரூட் போடுகிறதாம். காங்கிரஸுக்குக் குடைச்சல் கொடுக்க, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பெயரிலான அறக்கட்டளைகள் தொடங்கி அனைத்து அறக்கட்டளைகளின் கணக்கு வழக்குகளையும் துருவிக் குடைச்சல் கொடுக்கும் வேலைகள் தொடங்கியிருக்கிறது.
அதேபோல் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய பா.ஜ.க. அரசு தயாராகி வருகிறது எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. அண்மையில் தி.மு.க.வில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் ஐக்கியமானவரிடம் ஒரு புகாரை வாங்கிய டெல்லி, முரசொலி அறக்கட்டளை உள்ளிட்டவைகளில் ரெய்டை நடத்த வேண்டும் என்ற திட்டமும் விறுவிறுப்பாக வகுத்திருக்கிறது. இதனை அறிந்த தி.மு.க., அதில் சிக்காமல் இருக்கவும், சட்ட ரீதியாகச் சந்திக்கவும் உஷாராகவே இருக்கிறதாம்.