Skip to main content

ஆறுமுகசாமி ஆணையம்: மாஜி அமைச்சர் பெயருக்கு இடைக்கால தடை

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Arumugasamy Commission: Interim ban on former minister's name

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் தங்களது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றிருந்தது.

 

இந்நிலையில் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். மக்களிடையே எனக்கு நற்பெயர் உண்டு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சாட்சியாக என்னை விசாரிக்க அழைத்தது. தற்போது விசாரணை அறிக்கையில் என் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது ஏற்புடையது அல்ல. எனவே இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயர் சேர்க்கப்பட்டதற்கும் குற்றம் சாட்டப்பட்டதற்கும் தடை விதிக்க வேண்டும். அதை எவரும் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

 

இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்பட்டுள்ள பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்தும் இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, 4 வாரங்களுக்கு இவ்வழக்கை ஒத்திவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்