திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன்குளம் மனோகரன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். தற்போது அதிமுக ஊராட்சி செயலாளர், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர். அமைச்சர் காமராஜின் அண்ணன் மகனுக்கு தனது அண்ணன் கோவிந்தராஜ் மகளை திருமணம் செய்து கொடுத்து சம்மந்தி ஆனார்.
இவருக்கு பெட்ரோல் பங்க், திருமண மண்டபம், ரெடிமிக்ஸ் பிளாண்ட், பஸ், தங்கும் விடுதி போன்ற தொழில்கள் உள்ளது. இவர் சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒதுங்கியே இருக்கிறார். சசிகலா குடும்ப உறுப்பினர் அதிமுகவுக்கு எதிராக மன்றம் அமைத்துவிட்டு மன்னார்குடி வந்தபோது அவரை விரட்டியவர் சேரன்குளம் மனோகரன்.
இன்று மன்னார்குடியில் அவரது 6ந் தெரு வீடு, கீழராஜவீதி பெட்ரோல் பங்க், கம்மாளர் தெருவில் அலுவலகம், பந்தலடியில் உள்ள தங்கும் விடுதி, நீடாமங்கலம் ரெடிமிக்ஸ் பிளான்ட், திருகருக்காவூரில் உள்ள கல்யாணமண்டபம் ஆகிய 6 இடங்களில் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் மனோகரன் ஒரு பிரச்சனைக்குறிய இடத்தை வாங்கிய வழக்கில் கைது நடவடிக்கைக்கு போலிசார் வந்தபோது சில நாட்களுக்கு முன்பே மன்னார்குடியில் இருந்து வெளியூர் சென்றுவிட்டார்.
சோதனை குறித்து மன்னைவாசிகள் கூறும்போது, சசிகலா குடும்பத்தில் இப்ப உறவு இல்லை. ஆனால் நல்ல வளர்ச்சி. அதனால் அவர்களில் யாராவது புகார் அனுப்பி இருக்கலாம் அல்லது பாஜக பக்கம் இழுக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் என்றனர்.
சேரன்குளம் மனோகரனோ, கணக்குகள் மிகச் சரியாக வைத்திருக்கிறேன். எதற்காக இந்த சோதனை என்று தெரியல. இதுவரை 4 முறை சோதனை நடந்துவிட்டது. எதையும் நான் மறைத்திருந்து எடுக்கவில்லை. அதுபோல இதுவும் வழக்கமான சோதனை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு அரசியல் மற்றும் தொழில் எதிரிகள் இல்லை என்றார்.