பிரபல தொலைக்காட்சி நிறுவனமான, 'ரிபப்ளிக்' சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, கட்டிடங்களின் உள்ளரங்கு வடிவமைப்பாளரின் தற்கொலை வழக்கில் சமீபத்தில் கைது செய்தது, ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் காவல்துறை! இந்தக் கைது சம்பவம் தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அர்னாப், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடன் கைது செய்யப்பட்ட நிதிஷ் ஷர்தா, பெரோஸ்சேக் ஆகியோரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களது ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் கார்னிக் மற்றும் ஷிண்டே ஆகியோர், நேற்று முழுவதும் இந்த மனு மீது விசாரணை நடத்தினர். ஆனால், எந்த முடிவையும் தெரிவிக்காமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், அர்னாப்பின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘’இந்த மனுவில் உயர்நீதிமன்றம் அதிகாரம் செலுத்தும் அளவிற்கு முக்கிய விஷயங்கள் ஏதுமில்லை. அதனால், அலிபாக் கூடுதல் நீதிமன்றத்தையே மனுதாரர்கள் அணுகலாம்‘’ எனச் சுட்டிக்காட்டி, ஜாமீன் தர மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, அலிபாக் கூடுதல் நீதிமன்றத்தில், அர்னாப் சார்பில் ஜாமீன் மனு, தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மீது ஓரிரு நாளில் தீர்ப்பு வழக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நீதிமன்றக் காவலில் இருக்கும் அர்னாப், சிறையில் அடைக்கப்படாமல், பள்ளிக்கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு போலீஸாருக்குத் தெரியாமல் மொபைல் ஃபோன் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராய்காட் மாவட்டத்தின், 'தலோஜா' சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.