தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று குறித்த உண்மை நிலைமையை வெளியிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக (பொது) உதவியாளரிடம் தி.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடிதம் வழங்கினார்.
தினந்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், முடிவுகள், மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை வசதிகள், மருத்துவர், செவிலியர் எண்ணிக்கை வெண்டிலேட்டர் எண்ணிக்கை என முழு விபரங்களையும் வெளியிட வேண்டும்.
ஊரடங்கு, தளர்வு என மாற்றி, மாற்றி அறிவித்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பணி செய்ய இயலாமல் தவிக்கிறார்கள். கரோனா குறித்த உண்மை நிலைமையை அறிவித்தால், மக்கள் அதற்குத் தக்க தங்கள் பணியைத் தொடர இயலும் என்பதால் தான் முழு புள்ளி விபரத்தை வெளியிட வலியுறுத்துகிறோம், எனக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.
"இப்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அறிவிக்கப்படுகிறதே தவிர, பரிசோதனை எண்ணிக்கை அறிவிக்கப்படுவதில்லை. சென்னை மாநகரில் உண்மை நிலைமையை, மக்களிடம் மறைத்ததால் தான் இன்றைக்கு உலகத்திலேயே கரோனா வேகமாக பரவுவதில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
மதுரை, சேலம், கோவை, திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் பரவல் வேகம் அதிகரிப்பதாக தகவல் வருகிறது. சென்னை நிலை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் ஏற்படாமல் இருக்க முழு உண்மை நிலையை அரசும், மாவட்ட நிர்வாகமும் தினம் அறிவிக்க வேண்டும்" என்று சிவசங்கர் மேலும் தெரிவித்தார்.