முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் பொன்விழா இன்று அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஊடகங்களில், (30 ஆயிரம் கோடி விவகாரத்தில்) ‘பிடிஆர் இம்மாதிரி சொல்லியிருக்கிறார். மத்திய அரசு விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்துக் கொண்டிருக்கிறது’ என பேசிக்கொண்டார்கள். நாங்கள், மூவரையும் கஸ்டடியில் எடுங்கள் என சொன்னோம். பிடிஆர் இனி அனைத்தையும் சொல்லிவிடுவார். விரைவாக பிடிஆர் எங்கள் கட்சிக்கு வந்துவிடுவார் என நினைக்கிறேன்.
ஆவடி நாசரை எங்கள் கட்சியில் இணைப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளீர்களா என கேட்கிறீர்கள். எங்கள் கட்சியில் வலை வீச வேண்டிய அவசியமோ ஆள் பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை. பணத்தை வைத்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தலைவர்களைப் பார்த்து கொள்கைகளைப் பார்த்து வரக்கூடியவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள். அவரும் வரக்கூடிய காலமாக இருக்கலாம்.
எங்கள் ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்தது. இடையே கொரோனா வந்தது. கொரோனாவில் மருத்துவர்கள் பலர் இறந்துள்ளனர். மருத்துவப் பணிக்காக தேர்வு எழுதியவர்கள் இப்போது மருத்துவப் பணியில் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என கேட்கிறார்கள். அதுதான் நியாயம். அந்த மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்” என்றார்.