ஆளுநர் நியமனத்தில் இந்திய சரித்திரத்தில் இல்லாத ஒன்றை மத்திய அரசு செய்துள்ளதாக ஆளுநர் தமிழிசை கூறினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை சென்றார். அங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநருக்கு பயிற்சி பட்டறை என்றும் ஆளுநருக்கு பயிற்சி கொடுத்து அனுப்புகிறார்கள் என்றும் இங்கு அரசியல்வாதிகள் ஆளுநரை நோக்கி பேசுகின்றனர். ஆளுநர் பதவி என்பது பொத்தாம் பொதுவாக கொடுக்கின்ற பதவி என்பது போலவும் தகுதி இல்லாத பதவி என்பது போலவும் பேசுகிறார்கள்.
மத்திய அரசு எந்த அதிகாரம் கொடுத்தாலும் நாங்கள் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என பேசுவது உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. நேற்று நிருபர் ஒருவர், அனைவரும் ஆளுநர் ஆகிறார்கள் ஏன் மத்திய அமைச்சராக இல்லை என கேட்டார். அதற்கு, மக்கள் எங்களை எம்.பி. ஆக்கினார்கள் என்றால் நாங்கள் அமைச்சராக இருப்போம் என்று தான் சொன்னேன். இதற்கு தமிழக மக்களை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் தமிழக மக்கள் மீது அதிக அன்பு கொண்டுள்ளோம். தமிழக மக்களுக்கு அதிக சேவை செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.
மக்கள் மீது அன்பு இருப்பதால் தான் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் நான்கு மாநிலங்களில் ஆளுநராக இருக்கிறார்கள். இது இந்திய சரித்திரத்தில் எங்குமே நடக்காத ஒன்று. மதுரை என்பதால் நான் எய்ம்ஸ் பற்றி கூற வேண்டும். நானும் மருத்துவர் என்பதால் இதனை கூறுகிறேன். எய்ம்ஸ் என்பது உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை. அது பல கட்டமைப்புகளை வைத்து கட்டப்பட வேண்டும். அதில், மாணவர்கள் ஏற்கனவே 50 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நிச்சயமாக கட்டி முடிக்கப்படும். ஆனால், எய்ம்ஸ் விஷயத்தில் மத்திய அரசு மக்களை வஞ்சிக்கிறது என்று கூறுவது தவறு.
நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன்களாகவும் குடிமகளாகவும் இருக்கின்றனர். இது தமிழகத்திற்கு பெருமை. இந்த பெருமையை பிரதமர் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த பெருமையை நீங்கள் சிறுமை என நினைத்தீர்கள் என்றால் அதனால் நாங்கள் ஒன்றும் பாதிக்கப்படபோவதில்லை” எனக் கூறினார்.