கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா கடந்த ஆண்டு சசிகலாவைக் கட்சியில் சேர்க்கக் கோரி பேசியும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக அன்வர் ராஜா செயல்பட்டதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அன்வர் ராஜா இன்று எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று அதிமுகவில் இணைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலகிச் சென்றவர்கள் தலைமையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று தன்னை அன்வர் ராஜா அதிமுகவில் இணைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2001 முதல் 2006 வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.