நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.