Skip to main content

“ஆர்.எஸ். பாரதியை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்” - அண்ணாமலை

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Annamalai says Police should arrest RS Bharathi

 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்ததையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ். பாரதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, “ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து போடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறார் நாகலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர்.  

 

நான் சொல்வதை தவறாக நினைக்கக் கூடாது. நாகலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள். நாய் கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை விரட்டியடித்தார்கள். அப்படி என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்” என்று பேசினார். இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

திருச்சி மாவட்டம் திருவரங்கம் பகுதியில் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை நேற்று (06-11-23) அங்குள்ள ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாகலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால், அவர்கள் நாய்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அந்த மக்களை அவமானப்படுத்தியுள்ளார்.

 

கடந்த 30 மாதங்களாக அவர் இதுபோன்று தான் பேசி வருகிறார். அதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை அவரைக் கைது செய்ய வேண்டும். தமிழக காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாகலாந்தில் யாராவது ஒருவர் முன்வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் போதும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு கைது செய்து நாகலாந்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்