
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையிலேயே நேற்று முன்தினம் உடற்கூராய்வு முடிந்தது. மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஒருபுறம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார். இதில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான புகார்களை அண்ணாமலை தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் போலி பாஸ்போர்ட்கள் தயாரிக்கப்பட்டதில் தமிழக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உடந்தையாக இருப்பதாக ஏற்கனவே அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில் அதுகுறித்தும் இந்த சந்திப்பில், ஆளுநரிடம் புகார் தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.