இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில், அரசியலமைப்பு சட்டங்களை பாஜக அரசு அவசரச் சட்டங்கள் மூலமாக அழிக்கிறது. இந்த நிலையில் இவர்கள் (பாஜகவினர்) அம்பேத்கர் நினைவு நாளை போற்றுவது வேதனை அளிக்கிறது என திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு,
''திருமாவளவனைப்போல, பாலகிருஷ்ணனைப்போல அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கட்சி பாஜக இல்லை. அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் என்பவர் வியாபாரப் பொருள் மட்டும் தான். ஆனால் பாஜக அப்படி இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அம்பேத்கர் மத்தியப்பிரதேசத்தில் பிறந்தார். நாசிக்கில் கடைசி காலத்தில் இறைவனடி சேர்ந்தார். டெல்லியில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஐந்து இடங்களை பஞ்ச தீர்த்தம் என்று சொல்கின்றோம்.
அம்பேத்கருக்கு நினைவிடம் கட்டிய பெருமை பாஜக அரசுக்கு உண்டு. லண்டனில் அம்பேத்கர் லாயராக பிராக்டிஸ் செய்த வீடு கடனில் இருந்ததை கூட மீட்டெடுத்தது நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து இருக்கின்றோம். அதையெல்லாம் தாண்டி எஸ்.சி, எஸ்.டி சட்டம் என்பது மிக முக்கியமான சட்டம். அந்த சட்டத்தில் காங்கிரஸ் அரசு 10 வருஷமாக சேர்க்கப்படாத விஷயங்களை நாம் ஆட் பண்ணி இருக்கோம். யாரையாவது வலுக்கட்டாயமாக மொட்டை அடிக்க வைத்தால் அது குற்றம், ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை போட்டால் குற்றம் இதைப்போன்று புதிதான சில விஷயங்களை கூட அந்த சட்டத்தில் பாஜக கொண்டு வந்திருக்கிறது.
முதன்முதலாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்ற அற்புதமான மனிதரை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்த கட்சி பாஜக. இது போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எடுத்துக்காட்டாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அப்படி இருக்கும் பொழுது அம்பேத்கரை வைத்து வியாபாரம் மட்டும் செய்யக்கூடிய கட்சி திருமாவளவனுடைய கட்சி. குறிப்பாக ஜி.எஸ்.டி சட்டத்தைப் பற்றியே தெரியாமல் ஐந்து வருடம் ஜி.எஸ்.டி பற்றி பேசியவர் அவர். மறுபடியும் அவர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை முழுமையாகப் படித்துவிட்டு வந்து பாஜக பற்றி குற்றம் சொல்லலாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவன் எம்.பியாக இருக்கிறார் மோடியோ, அமித்ஷாவோ சேர் மேல் நடந்துபோய் காரில் ஏறி பார்லிமெண்ட்டுக்கு போவது கிடையாது. அந்த மாதிரி போய்விட்டு கண்ணாடி கூண்டிலிருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன்'' என்றார்.