தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. பாத யாத்திரையின் ஒரு பகுதியாக தற்போது மதுரையில் அண்ணாமலை தனது பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கும் இடையில் வார்த்தைப் போர் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலை தனது பாத யாத்திரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அழைப்பின் பேரில் நாளை (06.08.2023) டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நாளை மாலை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரையில் நாளை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.