பேனா சின்னம் விவகாரம் தொடர்பாக சீமான் உடன் கைகோர்ப்பது குறித்து அண்ணாமலை விளக்கியுள்ளார்.
பாஜக கட்சியைச் சேர்ந்தவரின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞர் பேனா சின்னம் தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் மீனவர் அணித் தலைவர் முனுசாமி கலந்து கொண்டார். அவர் சொன்ன கருத்து தான் பாஜகவின் கருத்து.
தமிழகத்தில் மிகப்பெரிய கலாச்சாரமாக சிலை கலாச்சாரம் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவி உள்ளது. போட்டி போட்டு சிலை வைக்கிறார்கள். அதில் அரசுப் பணத்தை செலவு செய்து மக்களது வரிப்பணத்தை செலவு செய்து கொடுத்த வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு இதற்கு காட்டக்கூடிய அவசரம் நேற்று நமக்கு தெரிந்தது. இது உண்மையாகவே அரசு நடத்தும் கருத்துக்கேட்புக் கூட்டமா அல்லது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமா? என சந்தேகம் வந்தது.
திமுக தனது சொந்த செலவில் அவர்கள் வாங்கிய இடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு உரிமை உள்ளது. ஆனால் பொது இடத்தில் அவர்கள் என்ன வைத்தாலும் மக்கள் கருத்தை அவர்கள் மதிக்க வேண்டும். நேற்று கருத்துக்கூட்டத்தில் பிற அரசியல் இயக்கங்கள், பொதுமக்கள் என ஏகமனதாக அனைவரும் சொல்லியது அது வேண்டாம் என்பது தான்.
ஆனால் திமுக இதில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி வேகமாக செயல்படுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். பேனா சிலை விவகாரத்தை பொறுத்தவரை சீமானோடு கைகோர்க்கிறீர்களா என கேட்கின்றனர். ஆனால் தமிழர்களோடு கைகோர்க்க தயாராக இருக்கின்றோம். என்ஜிஓ மீனவர் சங்கங்களோடு கைகோர்த்துக் கொண்டு இருக்கின்றோம். அதனால் தான் நாங்கள் பேசாமல் தமிழக பாஜக மீனவர் அணித் தலைவர் முனுசாமியை பேசச்சொன்னோம். அவரே ஒரு மீனவர்” எனக் கூறினார்.