நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இதனையடுத்து இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.
இறுதியாக விஜய்யின் குரலில் ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் கட்டியின் பெயருக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த காணொளியில், “பொதுவாக நமக்கு ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்றால், நமது பேரே ஒரு அடையாளமாக மாற வேண்டும். அதற்கு அப்படி ஒரு நேர்மறை எண்ணம் பெயரில் இருக்க வேண்டும். அந்த எனர்ஜியை கொடுப்பதே அந்த பெயரில் உள்ள வார்த்தைகளில் வலிமை தான். அப்படி ஒரு நேர்மறை அடர்த்தி, நேர்மறை அதிர்வு, நேர்மறை வலிமையும் ஒருசேர ஒரு சேரக் கொண்ட சொல் அது. என்றைக்கும் தன் தன்மையை இழக்காத ஒரு சொல். இந்த வார்த்தை சொல்லும் போதே உச்சரிக்கும் போதே, உச்சரிப்பவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒரு பெரும் கூட்டத்தையே உணர்ச்சியோடு உச்சத்தில் வைக்கிற சொல். உற்சாகப்படுத்துகிற சொல். நம் மக்களின் நாடி நரம்பு நான் ஏற்றும் அந்த சொல். அந்த வார்த்தை வேறு என்ன?. வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி தான் அந்த சொல். வெற்றி என்பது நினைத்ததை மிச்சம் மீதி இல்லாமல் செய்து முடிப்பது. மனதிற்குள் உள்ள நோக்கத்தை நிறைவேற்றுவது. வாகை சூடுவது என்று பலர் அர்த்தங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு வார்த்தை தான் கட்சியின் மைய சொல்லாகவும், மந்திர சொல்லாகவும் மாறி நிற்கிறது.
கட்சியின் முதல் சொல் தமிழகம். நம் மக்களுக்கான அங்கீகாரத்தை அடையாளத்தையும் சொல்வதற்கான ஒரு வார்த்தை கட்சியின் முதல் வார்த்தையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தேர்ந்தெடுத்தது தான் தமிழகம். தமிழகம் என்றால் தமிழர்களின் அகம். தமிழர்கள் வாழும் இடம் என்று சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை பதிற்றுப்பத்து எனப் பல இலக்கியங்களில் இடம் பிடித்த ஒரு வார்த்தை தமிழர்களும் ஒழுங்கா முறையாக ஆழமாகப் படித்த நிறையப் பேர் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த தமிழகம் தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா முறைப்படி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த நாடறிந்த வரலாறு.
கட்சி பெயரின் மூன்றாவது வார்த்தைக்குக் கழகம். இது தான் மூன்றாவது வார்த்தை. கழகம் என்றால் படை பயிலும் இடம் என்று அர்த்தம் உள்ளது. அந்த வகையில் நம்முடைய இளம் சிங்கங்கள் பயிலும் இடம் தான் கழகம். அதனால் கழகம் என்ற வார்த்தை சரியாகவே பொருந்தி நிற்கிறது. தமிழகம், வெற்றி, கழகம் இந்த மூன்று வார்த்தைகளும் கொண்டு மூண்டு எழுந்திருக்கும் அரசியல் உலகின் அணையா பெருஞ்சுடர் தான் தமிழக வெற்றி கழகம். அது மட்டுமில்லாமல் பெரும் புயலின் சூறாவளியும் தன்னுள் ஒளித்து வைத்துள்ள, ‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளின் உயிர் நாதமும் சேர்ந்தது தான் கட்சியின் அடையாளமாக மாறியுள்ளது. இனி வரப்போகிற நாட்கள் ஒட்டு மொத்த மக்களின் ஆதரவாலும், ஆசீர்வாதத்தாலும் தமிழ்நாட்டின் வெற்றிக்கும், தமிழ் நாட்டில் உள்ள மக்களின் வெற்றிக்கும் அஸ்திவாரம் அமைத்து உலக தமிழர்களின் மிகப்பெரிய அடையாளமாக மாறி காலங்காலத்துக்கும் களத்திற்கு வெற்றிகரமாக வெற்றி நிற்க போது தான் தமிழக வெற்றி கழகம்.வாழ்க தமிழக வெற்றி கழகம் வளர்க தமிழகம்” எனத் தெரிவித்தார்.