டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இபிஎஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் சந்தித்தனர். அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இன்று துவங்கியுள்ளது என்றும் அண்ணாமலை - இபிஎஸ் கருத்து மோதல் குறித்தும் மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரம் கூறுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த சந்திப்பின் போது பாஜக தேசிய தலைவர் நட்டா, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடன் இருந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பனிப்போர் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி உடன் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியிடம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் கூடுதல் தொகுதி ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவிற்கு அளிக்கக்கூடிய தொகுதிகளை முன்னரே முடிவு செய்யும்படி அதிமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகியுள்ளது என்றும் அதிமுக - பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.