Skip to main content

செல்லூர் ராஜு குறித்த கேள்வி; “என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை” - அண்ணாமலை 

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Annamalai again comment on sellur raju

 

கடந்த சில தினங்களாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே ரிக்‌ஷா பேரணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,  “எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். அண்ணாமலை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அவ்வளவுதான். எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரிந்ததால் தான், அவரை அழைத்து கூட்டணிக் கட்சியின் கூட்டத்தில் மோடி தன் பக்கத்தில் அமர வைத்திருந்தார். ஆனால், அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை” என்று பேசியிருந்தார்.

 

இதையடுத்து  ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணத்தை  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மேற்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செல்லூர் ராஜுவின் பேட்டி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “சில பேர் அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லித் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை” என்று சாடினார்.

 

அதைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜு, “அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்லமாட்டேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டிலேயே மாநிலத் தலைவர் பொறுப்பை பெற்றிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. நீங்களும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் மீது துரும்பு எரிந்தால் பதிலுக்கு நாங்கள் இரும்பை வீசுவோம். தமிழகத்தில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்று  கூறினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பொன்னையன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

 

இந்த நிலையில், பாத யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை முதல் தெப்பக்குளம் வரை தனது பாதயாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். இதனிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “செல்லூர் ராஜுவை பொறுத்தவரை எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அவர் பத்தாயிரம் தடவை பேசினாலும் என்னுடைய கருத்தை ‘கட் காபி பேஸ்ட்’ செய்து அவரிடம் சொல்லுங்கள். அதனால் என்னுடைய கருத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பிரதமர் மோடி, இந்தி தான் தொன்மையான மொழி என்று பேசியிருக்கிறார் என்றால் அந்த ஆதாரத்தைக் காட்டலாம். தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியும் தொன்மையானது இல்லை என்று அவர் தொடர்ந்து பேசி வருகிறார்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்