சாதி கட்சி என்ற பழி எங்கள் மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. ஆளுநர் கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும். இன்னும் என்ன பிரச்சனை என்ன தாமதம். ஒரு பக்கம் உயிரிழப்புகள் இருக்கட்டும். ஒருபக்கம் சூதாட்ட நிறுவனங்கள் நூறு கோடி இருநூறு கோடி சம்பாதிக்கிறார்கள். அப்போ மக்களுக்குச் சந்தேகம் வருமா வராதா. ஏன் தாமதிக்க வேண்டும்.
சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 10 ஆண்டுகளில் 1100 பேர் இறந்துள்ளனர். இது குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். தேசிய நெடுஞ்சாலையில் இருவழிச் சாலைகளாக இருந்த 8 இடங்களில் 2024க்குள் அனைத்து இடங்களையும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவோம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பாமகவின் நோக்கம் 2026ல் பாமகவின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதன் அடிப்படையில் 2024 தேர்தலுக்கு வியூகங்களை அமைப்போம். பாமக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பாமக 2.O என்ற செயல் திட்டத்தில் மக்களை அணுகும்போது மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. எங்களின் நோக்கமே வளர்ச்சிதான்.
தமிழகத்தின் கட்சிகள் மக்களைப் பிரிக்கின்றன. சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் மக்களைப் பிரிக்கின்றனர். எங்களது கேள்விகள் மக்களின் வளர்ச்சிக்காக உள்ளது. மற்ற கட்சிகள் நீ தமிழனா, நீ இந்துவா போன்ற கேள்விகளைக் கேட்கின்றன. நாங்கள் சாதி கட்சி என்று வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது” என்றார்.