
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள எம். புதுப்பட்டியில் பிரபல தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் இன்று (26.04.2025) வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 5 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் கூறப்படுகிறது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (25.04.2025) இரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லப்பட்டப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.