அமித்ஷா தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், மகாராஷ்ட்ரா ஸ்வபிமான் பாக்ஸ் கட்சியின் தலைவருமான நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுக்கான கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது டெல்லியில் இருந்த நாராயண் ரானே மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உதவியுடன் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். புதன் கிழமை இரவு நடந்த இந்த சந்திப்பு குறித்து நாராயண் ரானே, ‘அமித்ஷா என்னிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா எனக் கேட்டார். நான் 2019ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் டெல்லிக்கு செல்லவேண்டும் என நினைத்திருந்தேன். அமித்ஷாவின் சலுகை குறித்து நான் இன்னமும் முடிவு செய்யவில்லை. அவரிடம் இதுகுறித்து யோசிக்க எனக்கு அவகாசம் வேண்டுமெனக் கூறிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
நாராயண் ரானேவின் இந்தக் கருத்து குறித்த விளக்கங்களோ, இதை உறுதிப்படுத்தும் விதமான தகவல்களோ பா.ஜ.க. தரப்பில் இருந்து இன்னமும் பெறப்படவில்லை. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது. 23ஆ தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.