Skip to main content

'திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை'-ஓபிஎஸ் தரப்பு வாதம்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

 'Amendments do not require approval of the General Assembly' - OPS's argument!

 

வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (08/07/2022) பிற்பகல் 02.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக, நீதிபதி நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், 'ஓபிஎஸ்ஸின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கு கட்சி நலனுக்கான வழக்கே இல்லை; தனிநபரின் தேவைக்கான வழக்கு. இந்த பிரச்சனைகள் குறித்து ஓபிஎஸ் பொதுக்குழுவில்தான் விவாதித்திருக்க வேண்டும் தவிர நீதிமன்றம் வந்திருக்கக் கூடாது. தனக்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணித்தான் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு தடைகோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஒரு கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வழக்கு தொடர வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டும். இப்படி முன் அனுமதி இல்லாமல் ஓபிஎஸ் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று கூறுகிறோம் ஆனால் ஓபிஎஸ் அந்த பதவியில் இருப்பதாகத் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை ஏற்றால் அவர் ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடிப்பதாக ஆகிவிடும். எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு தனது வாதங்களை முன்வைத்தது, 'அதிமுக கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. கட்சியின் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறைதான். 2021 ஆம் ஆண்டு பொதுக்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர்கள் கொண்டுவரப்பட்டனர். ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி காலி என ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பு வைத்துள்ள வாதம் தவறானது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இறந்த பொழுது என்ன ஆனாது என்பதை பதில் மனுவில் விளக்கவில்லை. தலைவர் உயிருடன் இல்லாதபோதுதான் பதவி காலி என கருத முடியும்'' என்று வாதத்தை முன்வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்