நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை ரூ.10 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு பெற்று அதனை பூர்த்தி செய்தி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். அதிலும் குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இன்று மாலை 6 மணியளவில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர்.
இந்த நேர்காணலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “10 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி நடத்திய மத்திய அரசில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். 3வது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும் என பா.ஜ.க.வுடன் இணைந்துதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறோம் என்பதில் உறுதியாக உள்ளோம். கூட்டணி தொடர்பாக இன்று இப்போதே பா.ஜ.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த செல்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பா.ஜ.க. - ஓ. பன்னீர்செல்வம் அணி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் எல். முருகன், கிஷன்ரெட்டி, வி.கே. சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.