தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் சந்திப்பதற்காக சசிகலா கடந்த 4 ஆம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள். பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்'' என்றார். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்திருந்த நிலையில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது. ஓ.ராஜாவோடு சசிகலாவை சந்திக்க சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி என்ற மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என சசிகலா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 'நம் இயக்கத்தை காப்பாற்றிட வேண்டும்' என்ற முழக்கம் வீண் போகாத வகையில் பணியாற்றுவேன்.நாம் மேற்கொண்டது ஆன்மீக பயணம் என்றாலும் தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எல்லையற்ற மகிழ்ச்சியில் என்னை திக்குமுக்காட வைத்த அதனை உள்ளங்களுக்கும் நன்றி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து கழகத்தை காப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.