சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரிலும் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தியிருந்தார். அந்த வகையில், உருவான இந்த கூட்டமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இது தேசிய அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார். தேசத்தின் நன்மைக்காக ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறினார்.
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர், மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் ஏதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள். பின்தங்கியோருக்கு எதிராக அவர் பேசியதாக கூறுகிறார்கள். அவர் எங்கே அப்படி பேசினார். அது சாதியல்ல, இதில் பின்தங்கிய சமுதாயத்தை எங்கே ராகுல் காந்தி அவமதித்தார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வீரப்ப மொய்லி, சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டையும் மத்திய பாஜக அரசு நீர்த்துப் போக முயற்சி செய்கிறது. நாட்டின் அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும். சமூக நீதிக்கான முன் முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் முன்னெடுத்துள்ளார். ஸ்டாலினின் முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை அளிக்கும் எனக் கூறியுள்ளார்.