
பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விமானத்தில் அவசரக்கால கதவை திறக்கவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்திருந்தனர். அந்த விமானம் சென்னையில் இருந்து திருச்சி புறப்படும்போது விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது.
இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவாகரத்தில் தவறுதலாகக் கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்” என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், விமானத்தில் தேஜஸ்வி அவசர வழி கதவைத் திறக்கவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் சிக்மகளூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அவர், “விமானத்தில் அவசர வழி கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி திறக்கவில்லை. அவர் தனது கையை அந்தக் கதவின் மேல் வைத்திருந்தார். அந்தக் கதவு சரியாக மூடாமல் இருந்ததால் அதை விமானப் பணிப்பெண்களின் கவனத்திற்குத் தான் தேஜஸ்வி கொண்டுவந்தார். அதன்பின்னர் தான் விமானப் பணிப்பெண்கள் அதைப் பார்த்தனர். இது அவரது கடமை. அவர் எவ்வகையிலும் அந்தக் கதவைத் திறக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.