கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது.
அதிமுகவின் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.
தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பேசினர். அதிமுக நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள்; மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக செய்யவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கப்படவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழ் மொழியைக் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலராக தேர்ந்தெடுத்த தொண்டர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு மிகச் சிறப்பாக எழுச்சியாக மதுரையில் நடைபெற்று முடிந்தது. அதிமுக மாநாட்டில் மதுரை நகரமே குலுங்கியது. இன்று இருக்கின்ற விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக மாநாட்டை விமர்சித்து பேசினார். அதிமுக மாநாட்டை போல எங்கள் மாநாடு இருக்காது. எடுத்துக்காட்டு மாநாடாக சேலத்தில் நடைபெற இருக்கின்ற திமுக மாநாடு நடக்குமென்று சொன்னார். அவர் சொன்னதுதான் மூன்று முறை திமுக மாநாடு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
அதிமுகவை விமர்சிக்கும் போதே இந்த பாதிப்பு இருக்கிறது உங்களுக்கு. எந்த கொம்பனாலும், அதிமுகவை அழிக்கவோ முடக்கவோ முடியாது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். அண்மையில் ஒரு அமைச்சருக்கு தண்டனை கிடைச்சிருக்கு. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை பெற காத்துக்கொண்டிருக்கிறாரக்ள். நாடாளுமன்ற தேர்தலுக்குள்ள பலபேர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். சொல்லவே கூசும் அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சொல்லலாமா? சொல்லவே வாய் கூசுகிறது. சில போதை ஆசாமிகள் பசு ஈன்ற கன்றுக்குட்டியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஆட்சி இந்த ஆட்சி. எந்த ஆட்சியிலாவது இப்படி நடந்துள்ளதா?'' என்றார்.