‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சாரப் பயணத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நடத்திவருகிறார்.
இதில், முதல் நிகழ்ச்சியாக சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவரிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஒன்பதரை ஆண்டுகளாகக் கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என அ.தி.மு.க.வினர் எண்ணுகின்றனர். அது நடக்காது. தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகி வருகிறார்கள். வருகிற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அரசு அகற்றப்படும். கிராமங்கள் தோறும் மக்களைச் சந்திக்கும் இயக்கம் தி.மு.க.தான்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர்கள் கடந்த 14 நாட்களாகப் போராடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் படித்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தெரியாதா. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்சனையை ஏன் அமைச்சர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் படித்த கல்லூரிக்கு இந்த நிலைமையா. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணம் குறைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி தி.மு.க. ஆட்சியில் திறப்பு விழா காணும்” எனக் கூறினார்.