விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறியதுடன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. விளையாட்டு மைதானத்தில், வணிக வளாகத்தில் மது விற்பனைக்கு அரசு அனுமதியளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. எந்த சமூகப் போராளியும் நடிகரும் கள்ளச்சாராய மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் பல பேர் சாராயத்தை பற்றி பாட்டு பாடினார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விற்பனை செய்த சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்தவித கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்றார். மேலும், “செங்கல்பட்டு மாவட்டம் சித்தாம்பூர் பகுதியில் போலி மதுபானத்தை விற்பனை செய்ததன் மூலமாக அப்பாவி மக்கள் 5 பேர் இறந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் இதனை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டது. கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் பிடிபட்டால் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம். இந்த 2 ஆண்டுகளில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகியுள்ளார்கள்” என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது 2016ல் இருந்து 2020 வரை 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக செய்திகள் உள்ளன” என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “எங்கே ரிப்போர்ட், சும்மா பொதுவாக எல்லாம் பேசக்கூடாது. ஆதாரத்தை கொடுங்கள். நீங்கள் இதை திசை திருப்ப பார்க்கிறீர்கள்... நன்றி வணக்கம்” எனக் கூறி எழுந்து சென்றார். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 20 பேர் உயிரிழந்ததாக 19/07/22 அன்று வெளியான NCRB அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி பதில் பதிவில் பதிவானது வெளியாகியுள்ளது.