எங்களுடன் கூட்டணி வைக்காததுதான் அதிமுக செய்த மிகப்பெரிய தவறு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இன்றைக்கும் விஜயகாந்தை தெய்வமாக, தலைவராக நினைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் யாரோ ஒருவர் கட்சியைவிட்டு போவதால் கட்சிக்கு ஒன்றும் இழப்பு கிடையாது. ஒருவர் போனால் அந்த இடத்திற்கு பத்து பேர் வந்துகொண்டு இருக்கிறார்கள். அதனால் எங்களுடைய ஆலோசனையே கட்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு போவதைப் பற்றித்தான். பெரிய அளவில் கூட்டம் கூடக்கூடாது என தடுத்ததால்தான் காலதாமதமாக இந்த கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இனிய ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும் என்பதையும் சொல்லி இருக்கிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தான் எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெறும். அந்த வகையில் இந்த வருஷம் இன்னும் ஒரு மாத காலத்தில் நடத்தி தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப இருக்கிறோம்.
விஜயகாந்த் நல்லா இருக்காரு நேற்று கூட ஜெனரல் செக்கப்பிற்காக அழைத்துச் சென்றோம். இப்போ சிறந்த முறையில் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். எல்லா நிர்வாகிகளும் ஆலோசனையில் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதை விஜயகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறோம். இங்கு எல்லா பதவிகளையும் தீர்மானிப்பது விஜயகாந்த் தான். யாருக்கு எந்தப் பதவி, எப்போது கொடுக்கவேண்டும் என அவருக்குத் தெரியும். அவர் அறிவிப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். எங்களுடன் கூட்டணி வைக்காததுதான் அதிமுக செய்த மிகப்பெரிய தவறு. இன்று அவர்கள் ஆட்சி இழந்திருக்கிறார்கள். ஏன் என்றால் ஆறு மாதத்திற்கு முன்னாடியே தேமுதிகவிலிருந்து பேசினோம். இப்போது இருந்தே கூட்டணி, யாருக்கு எந்த தொகுதி என்று பேசலாம் என சொன்னோம். ஆனால் அவர்கள் மிஸ் பண்ணிவிட்டார்கள். அதன் விளைவு ஆட்சியை இழந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை. இப்போது அதை அவர்கள் உணர்கிறார்கள்.
தேமுதிகவை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு முன்பே எல்லாருமே எங்களிடம் பேசும்போது அதற்கான ஆலோசனையைக் கொடுத்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நாங்கள் பேசுவோம்...பேசுவோம்... என காலம் தாழ்த்தி கடைசியில் முடிவெடுக்க முடியாமல் ஏற்பட்ட பிரச்சனைதான் இப்போது ஆட்சியை இழந்திருக்கிறார்கள். சரியான நேரத்தில் நாங்கள் சொன்ன முடிவை எடுத்திருந்தால் இன்று ஆட்சி அதிமுக கைப்பற்றியிருக்கும். தேமுதிகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். இழந்தது அவர்கள்தான்'' என்றார்.