மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷிணி காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவேன் என வாக்காளர்களிடம் உறுதிமொழி கொடுத்து வாக்கு சேகரித்துவருகிறார்.
நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுபாஷினி அறிமுக கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடந்தை தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய சுபாஷிணி, "தஞ்சை மாவட்டத்தில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாராளுமன்றத்தில் தொடரந்து போராடுவேன். காவிரி படுகையில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரப்பட்டு குறைந்து வரும் நீர்மட்டத்தை உயர்த்துவேன்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கையான கல்வி, நீர், மருத்துவத்தை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன். அதோடு தஞ்சை மாவட்டத்தில் நெசவாளர்கள் நெசவுத்தொழில்கள் அழிந்துவரும் சூழலில் தற்போது திருப்பூர் போன்ற பகுதியில் வேலைக்கு செல்லும் நெசவாளர்களை மீண்டும் அவர்களது வாழ்வில் வசந்தம் ஏற்படும் அளவில் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன். ஏழை எளிய விவசாய மக்களுக்கு பொருளாதார மேம்பாடு அடைய அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்" என்று அக்கட்சிக்கே உரிய பாணியில் பேசினார்.