வேலூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியின் வேட்பாளராக அதிமுகவில் மாதனூர் ஒன்றிய செயலாளரான ஜோதிராமலிங்க ராஜீ என்பவரை நிறுத்தியுள்ளது. இந்த வேட்பாளருக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆம்பூர் நகர்மன்ற செயலாளர் மதியழகனை காணச்சென்றபோது 2 மணி நேரம் கட்சி அலுவலகத்தில் காக்கவைக்கப்பட்டார். பின்னர் வேண்டா வெறுப்பாக வேட்பாளரை சந்தித்தார்.
இந்நிலையில் ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட தோளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபா பாரத் என்பவர் சுயேச்சையாக ஆம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இவர் தனக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வேண்டுமென விருப்பமனு தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை தலைமை பரிசீலிக்கவில்லை என்பதால் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்த அதிமுகவை சேர்ந்த சிலர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து தனது வேட்புமனுவை ஆம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பேபி இந்திராவிடம் மார்ச் 25-ம் தேதி மதியம் தாக்கல் செய்தார். சொந்த கட்சியினரே அடுத்தடுத்து நெருக்கடி தருவதால் அதிமுக வேட்பாளர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார் என்கிறார்கள்.