நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப்போகும் அரசியல் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என சொல்லப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, 2019 - ல் ராஜினாமா செய்தார். அரசியலில் ஈடுபடுவதற்காகவே தனது பணியை அவர் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கேற்ப அவரும் தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அவரின் கருத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் இணையலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் பதிவு செய்தனர், ஊடகங்களும் இதனை பெரிதுப்படுத்தின. ஒரு கட்டத்தில், நான் கட்சி துவங்கினால், 'முதல்வர் வேட்பாளர் நானில்லை' என ரஜினி அறிவித்ததை கணக்கிட்டு, ரஜினியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதான் என்றும் ஊடகங்கள் எழுதின; விவாத மேடைகளையும் நடத்தின.
இப்படிப்பட்ட நிலையில், இன்று, தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவின் மூலம் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் அண்ணாமலை.
பாஜக குறித்து பேசியுள்ள அவர், "பாஜக தேசிய கட்சி. நானும் ஒரு தேசியவாதி. தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய பாதையை பாஜகவால் காட்ட முடியும் என நம்புகிறேன். பாஜகவில் இணைவதை தாமதமாகத்தான் முடிவு எடுத்து இருக்கிறேன். சமூக மாற்றம் என்பதைவிட, அரசியல் மாற்றம் மிகவும் முக்கியமானது. ஆதலால்தான் தற்போது அரசியலில் இறங்க முடிவு செய்து இருக்கிறேன். தமிழகத்தில் பாஜக குறித்து தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல இங்கு பாஜகவை யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்கிறார் அண்ணாமலை.