கிராமசபை கூட்டத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சி தேவநேரி திருநெடுங்குளம் ஊராட்சியின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீநிதி உள்ளார். இவர், கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். இந்தத் தகவல் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமாருக்கு செல்ல, கட்சியிலிருந்து ஸ்ரீநிதியை நீக்க தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட ஸ்ரீநிதி வந்துள்ளார். அவரை அதிமுகவினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதுபற்றி ப.குமாரிடம் அவர் கேட்டபோது உங்களை கட்சியிலிருந்து நீக்க தலைமைக்கு பரிந்துரை அளித்துவிட்டோம் எனக் கூறியுள்ளார். ஸ்ரீநிதி தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டுவந்ததால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.