மாவட்ட அமைப்புகளை பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்னும் அதிமுகவில் ஓய்ந்தபாடில்லை. இதில் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் கவனம் செலுத்தாததால் அதிருப்தியுள்ள அதிமுக பெருந்தலைகள் தினகரன் கட்சிக்கு தாவ நேரம் பார்த்து வருகிறார்கள். சசிகலா ரிலீஸ் ஆனதும் இந்த தாவல் படலம் கடகடவென அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடனை, முதுகளத்தூர், பரமக்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 4 தொகுதிகளும் அடங்கிய ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருந்தார். அவரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட போது மா.செ. பதவியையும் பறித்தார் எடப்பாடி. புதிய மா.செ.வாக முனியசாமியை நியமித்தார் எடப்பாடி.
தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் போர்க்கொடி உயர்த்துகிறார் மணிகண்டன். மாவட்டத்தில் மணிகண்டனுக்கும் முனியசாமிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இதனால் மாவட்டத்தில் கலகலத்துக் கிடக்கிறது அதிமுக! இதனை சரி செய்ய, முனியசாமி மா.செ.வாக உள்ள 4 தொகுதிகளில் ராமநாதபுரம், திருவாடனை தொகுதிகளை பிரித்து அதற்கு மணிகண்டனை மா.செ.வாக நியமிக்க வலியுறுத்தி எடப்பாடிக்கும் ஓபிஎஸ்சுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் மணிகண்டன் ஆதரவாளர்கள். இது நடக்காத பட்சத்தில் மாற்று யோசனையை திட்டமிட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!