ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அதில், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரது நீக்கம் தற்போதைய நோக்கத்திற்காக செயல்படாது. இந்த பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரை தேர்வு செய்யலாம். அல்லது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி வேட்பாளரை தேர்வு செய்து விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் இறுதி முடிவு குறித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
மேலும், ‘உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை படிவம் அனுப்பப்படும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு பதிலாக வேட்பாளர் விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் அதை விரிவான அறிக்கையாக தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் திங்கள் காலை கொடுப்பதற்காக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வருகை தந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் பிற முக்கிய நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர். அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவங்கள் அனுப்பப்படும். பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்துகளை கேட்டு ஒப்புதல் மற்றும் கையொப்பங்களை பெற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வழங்குவார்கள். இதன் பின் அந்த அறிக்கைகள் விரிவாகத் தயார் செய்யப்பட்டு திங்கள் காலை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.