Skip to main content

“இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி” - டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
Donald Trump warning on BRICS countries including India

ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் போது, அமெரிக்க டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் நடைபெற்றது. அதற்கான முயற்சியையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரிக்ஸ் கூட்டமைப்பின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மாற்றும் முயற்சியை இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. 

இந்த நாடுகள், புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்கவோ முயற்சி செய்தால் அவர்களுக்கு 100% சதவீதம் வரி விதிக்கப்படும். அப்படி முயற்சி செய்தால் அமெரிக்க பொருளாதார விற்பனைக்கு அவர்கள் விடைபெற நேரிடும். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள எந்த நாடும் மாற்ற முடியாது. அப்படி  முயற்சிக்கும் எந்த நாடும், அமெரிக்காவிடம் இருந்து விடைபெற வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்