திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி, அழகுபட்டி, கே.புதுக்கோட்டை, முருநெல்லிகோட்டை, ஜி.நடுப்பட்டி, டி.பண்ணைப்பட்டி, குரு நாதநாயக்கனூர் உட்பட ரெட்டியார் சத்திரம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக கட்சி யை சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் விழா திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்குத் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன். பொருளாளர் சத்தியமூர்த்தி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சிவகுருசாமி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், துணை மேயருமான ராஜப்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாஜக தொழில் பிரிவு மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் பெண்கள் உள்பட 5ஆயிரம் பேர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதில் அமமுக ஒன்றிய மாணவரணிச் செயலாளர் கருணாகரன், தேமுதிக ஒன்றிய விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், அதிமுக கிளைச்செயலாளர் பி.தியாகு, அமமுக ஒன்றிய துணைச்செயலாளர் ஜெகவீரன், பாஜக சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டச் செயலாளர் கணேசன், பாஜக ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அருண் பாண்டி, பாஜக ஓபிசி அணி ஒன்றிய செயலாளர் தினேஷ், பாஜக கிளைச்செயலாளர்கள் வினோத், சிவக்குமார் உட்பட மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “மாற்றுக் கட்சியிலிருந்து 5ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இதற்கு காரணம் தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியை நடத்தி வரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளே. வருங்கால தமிழகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான செயல் திட்டங்களால் இன்று தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையை நேசித்து வருவதோடு அதன் மூலம் அரசுப் பணி பெரும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள்.
குட்கிராமத்தில் உள்ள இளைஞர்கள்கூட தங்களை விளையாட்டு துறையில் ஈடுபட்டு சாதனை படைக்க தொடங்கிவிட்டார்கள். மழையா, புயலா எது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதால் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழும் நிலை உள்ளது. இப்போது இளைஞர்கள் 5ஆயிரம் பேர் திமுகவில் இணைந்துள்ளார்கள் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இங்கு மாவட்டச் செயலாளராக உட்கார்ந்திருக்கும் தம்பி செந்தில்குமார் இளைஞர் அணி பொறுப்பு வகித்த பின்பு படிப்படியாக உயர்ந்து மாவட்டச் செயலாளராக பதவியில் உள்ளார். அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் உள்ளது. இது போல உங்களுக்கும் பல வாய்ப்புகள் வரும் உங்கள் பணி மக்கள் பணியாக இருந்து மக்களுக்கு சேவை செய்தால் அதுவே உங்களை முன்னேற்றும். தமிழக அரசு அறிவிக்கும் எந்த அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரைக் குறிப்பாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்களை முன்னேற்றும் வண்ணம் அவர்களுக்கு வழங்கப்படும்” என்றார்.