2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. வேளாண்மை மானியக் கோரிக்கையில் இடம்பெற்றிருந்தது தான் இந்த வேளாண்மை பட்ஜெட்டிலும் இடம்பெற்றுள்ளது. வேளாண் மக்களுக்கென பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த உடன், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுவதும் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொன்னார்கள். அதைப்பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்று தந்த அரசு அதிமுக. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.13,500 தான் கொடுத்துள்ளார்கள். அதிமுக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.20,000 கொடுத்தோம்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் நடக்க முடியாத சவலைக்குழந்தையாகப் படுத்திருக்கிறது. எழுந்து கொள்ள முடியாத நிலையில் தான் இந்த வேளாண் பட்ஜெட்டை பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்கு அதிமுக 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை கொடுத்தோம். ஆனால், திமுக காலை 6 மணிநேரமும் மாலை 6 மணிநேரமும் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குகிறது” எனக் கூறினார்.