தனது மகன் ஓ.ரவீந்திரநாத் குமாருடன் ஜெயலலிதா சமாதியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் திருவல்லிக்கேணியில் வாலாஜா மசூதியில் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்தபோது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் மாலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது, அமைச்சர் உதயகுமாரைத் தவிர எந்த அமைச்சரும் வரவில்லை. மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கியமான நிர்வாகிகள் இதில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து மதுசூதனனை தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்று சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார் இருந்துள்ளார். வியாழக்கிழமை இவை நடந்த எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு மந்திரிசபையில் இடம் உண்டு என்று பாஜக சொன்னதும், அதனை வைத்திலிங்கத்துக்கு தர வேண்டும் என்று கோரினார் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேரை மாநிலங்களவை உறுப்பினராக்கிவிடுங்கள். மந்திரிசபையில் வைத்திலிங்கத்துக்கும், ரவீந்திரநாத் குமாருக்கும் இடம் தருகிறோம் என்று பாஜக சொல்லியிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவிடம் எந்த பதிலையும் சொல்லவில்லை. இதனால் கடும் கோபத்தில் உள்ளது பாஜக.
தமிழக பாஜகவோ, நாம் கேட்டது எட்டு தொகுதிகள், அதிமுக கொடுத்ததோ ஐந்து தொகுதிகள். அதுவும் தென்சென்னை, திருப்பூரை கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய அக்கறையை பாராளுமன்றத் தேர்தலில், அதுவும் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் காட்டவில்லை. அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு விழுவில்லை. பாஜகவை அவர் மதிக்கவில்லை என்று கூறியிருக்கிறது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக எதிர்ப்பாக உள்ளது.
இந்தநிலையில் எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர். நீங்கள் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகி அவைத்தலைவராகிவிடுங்கள். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகிவிடுவார் என்று கூறியுள்ளனர். இதன் பின்னணியில்தான் மதுசூதனனை சந்திக்க சென்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு இணையானது ஒருங்கிணைப்பாளர் பதவி, அந்த பதவியை விட்டுக்கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆகையால் தன் பக்கம் சில எம்எல்ஏக்களை, அமைச்சர்களை இழுக்க முயற்சித்து வருகிறார். அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளாராம்.
அதிமுகவில் இப்படிப்பட்ட சூழல் நிலவுகிற நேரத்தில் திமுக பக்கமும் செல்ல சில எம்எல்ஏக்கள் தயாராகி வருகிறார்களாம். இதனால் அதிமுக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல் அமைச்சராக்கினால் ஆட்சி நீடிக்க ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி ஆதரவு அமைச்சர்களோ, ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி ஏற்கனவே சென்ற அனைத்து எம்எல்ஏக்களும் நம்முடன் இருக்கின்றனர். ஆகையால் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக ஏற்க முடியாது என்றும், அவரது மகனுக்கு மத்திய மந்திரிசபையில் பதவி கிடைக்கக்கூடாது என்றும் கூறி வருகிறார்களாம். ஆகையால் எந்த நேரத்திலும் கூவத்தூர் பார்முலா தொடங்கும் என்கிறார்கள்.