Skip to main content

"அதிமுக வெட்கப்பட வேண்டும்" - திமுக காட்டம்!

Published on 04/08/2024 | Edited on 04/08/2024
"ADMK should be ashamed" - DMK

உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு, பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை கடந்த 1 ஆம் தேதி (01.08.2024) வழங்கினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜும், ஆதிதிராவிடர் நலக்குழுத் துணைத் தலைவரும், அமைச்சருமான மதிவேந்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அருந்ததியர் சமூகத்தினர் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம்?. அந்த சமூகத்திற்கு திமுக அரசு உள் ஒதுக்கீடு வழங்கிய நேரத்தில், ஏன் ஜெயலலிதா எதிர்த்தார்? என்கிற வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

"ADMK should be ashamed" - DMK

கடந்த 2008 ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அதில், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும், கே.பி.அன்பழகனும் கலந்து கொண்டார்கள். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மட்டும் வெளிநடப்பு செய்தார். கூட்டத்தின் இறுதியில், உள் ஒதுக்கீடு குறித்துப் பரிந்துரைக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஜெயலலிதா வெகுண்டு எழுந்தார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் சொல்லவில்லை. அதனை அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் சுட்டிக் காட்டி பேசும் போது, அதிமுகவின் முடிவு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒத்துப் போகக் கூடிய முடிவாகத்தான் இருக்கும் என்றார். ஆனால், ஒத்துப் போகாத முடிவைத்தான் அன்றைக்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எடுத்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, எடுத்த முன்னெடுப்புகளால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றிருக்கிறோம். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்துவிட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்