அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை முன்னாள் மாநிலச் செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் V.V. செந்தில்நாதன் கட்சியிலிருந்து விலகி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான C.T. ரவி மற்றும் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் கண்டவர், இருமுறையும் தோற்றுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக இருந்த செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதற்கு முக்கியக் காரணம் எம்.ஆா். விஜயபாஸ்கா் இவரை எந்த இடத்திலும் வளரவிடாமல், எந்தக் கட்சி விழாவிற்கும் அழைக்காமல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்ததால் இவருக்கு ஏற்பட்ட விரத்தி காரணமாக கட்சித் தாவல் செய்ய முடிவு செய்துள்ளதாக செந்தில்நாதன் வட்டாரங்கள் கூறுகின்றனா்.
இதற்கு அரவக்குறிச்சி மட்டும் விதிவிலக்கு அல்ல, தொடர்ந்து பல அமைச்சா்களின் தலையீடு பலரை நசுக்கி வருவதோடு, தன்னைத் தவிர யாரும் வளா்ந்து விடக் கூடாது என்ற எண்ணம், இன்னும் எத்தனை கட்சி பொறுப்பாளா்களை கட்சித் தாவல் செய்ய வைக்கப்போகிறதோ தெரியவில்லை. அதிலும் தோ்தல் நெருங்கும் இந்த வேளையில் இப்படிபட்ட கட்சித் தாவல்கள் கட்சியைப் பலவீனப்படுத்தும் என்று கவலைபடாமல் அமைச்சா்கள் செயல்படுவது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? என்பதுதான் வருத்தமாக உள்ளது என்கின்றனர் ர.ர.க்கள்.