வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயரை மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக் கட்டளை என்று மாற்றம் செய்திருப்பதும் பேசுபொருளாக மாறியுள்ளது. வன்னிய சமூக மக்களிடம் திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு, திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் பா.ம.க. முயற்சியில் வன்னியர் கல்வி அறக்கட்டளை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவை இயங்குகின்றன.
இந்த நிலையில், இந்த அறக்கட்டளைக்கு டாக்டர் ராமதாஸின் பெயர் சூட்டப்பட, இது புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் "வன்னிய சத்ரிய சாம்ராஜ்யம்'’ அமைப்பின் தலைவர் சி.ஆர்.ராஜனோ, "வன்னிய சமுதாயத்துக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு நிர்வகிக்க, கலைஞர் காலத்தில் வன்னியர் பொதுச்சொத்து வாரியம்’ அரசால் அமைக்கப்பட்டது. இது செயல்படாமல் முடக்கப்பட்டு வந்த நிலையில், இப்போதைய எடப்பாடி அரசில் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் நிர்பந்தம் கொடுத்து, இதை சட்டப் பூர்வமான வாரியமாக்கி, இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று விட்டோம்.
இப்போது பலரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வன்னியர் சொத்துக்களை இந்த வாரியம் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சொத்துக்களுக்கு பா.ம.க .தரப்பு ராமதாஸ் பெயரை வைத்திருக்கிறது. இதற்காகவே பா.ம.க.-அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்துவருகிறது. இந்த சொத்தை வாரியத்துக்கு மீட்காமல் நாங்கள் ஓயமாட்டோம்' என்கிறார். இது குறித்து விளக்க அறிக்கை கொடுத்திருக்கும் பா.ம.க. தலைவரான ஜி.கே.மணியோ, "மருத்துவர் ராமதாஸின் 80-ஆம் ஆண்டு முத்து விழாவில் அவரை கௌரவிக்கவே, அறக்கட்டளைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது' என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.