நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் அறிவித்திருந்தார். அதேபோல் 234 தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். மதம், சாதி வேறுபாடு இல்லாத அரசியலாக இருக்கும் என்றும் சிஸ்டம் சரியில்லை என்றும் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் ரஜினி புதிய கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று பேசி வருகின்றனர். அப்போது மதுரையில் பெரிய மாநாடு மாதிரி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அப்போது கட்சியின் பெயர், கொடியை, ரஜினி அறிமுகம் செய்வார் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாகவும், தற்போது ரஜினிக்கு ஆதரவாக பேசி வருபவர்கள் நிச்சயம் அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சிகள் சேருவார்கள் என்றும் அதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்வரனின் இந்த பேச்சால் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்த அமைச்சர்கள் ரஜினியிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று எடப்பாடி கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.