தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடையும். வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 22ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 என்றும் அறிவித்திருந்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆகியவற்றை முடித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு தாக்கலைத் துவங்கியுள்ளனர்.
அதன்படி இன்று (15.03.2021) பகல் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல் திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல் அமமுகவின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான டிடிவி தினகரன், அவர் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் இன்று தேர்தல் அலுவலரைச் சந்தித்து அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம், குறைந்தது ஒரு லட்ச வாக்குகளைப் பெறுவதே இலக்கு. தமிழக மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சியை அமைப்போம். அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அமமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளோம் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்” என்று தெரிவித்தார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.