தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்திய நாராயணனை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஊழல் புகார்கள் குறித்து விவாதம் நடத்த எந்த இடமாக இருந்தாலும் தயார்; மக்கள் நீதிபதியாக இருக்கட்டும். தி.மு.க. ஆட்சி அமைப்பது போல் ஸ்டாலின் கனவு வேண்டுமானால் காணலாம்; நினைவில் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் சிங்கப்பூராக மாறியுள்ளது. சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வின் வெற்றிக் கோட்டை. சென்னை மாநகரில் 192 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் 127 பணிகள் நடைபெறுகிறது. 36 சிமெண்ட் சாலை பணிகள் ரூபாய் 6 கோடியில் நடைபெறுகிறது. சென்னையில் 33 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களாக மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இறைவனும், இயற்கையும், மக்களும் அ.தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள். ஸ்டாலின் இனி மனுவும் வாங்கவும் முடியாது, பூட்டை உடைக்கவும் முடியாது, ஆட்சிக்கும் வர முடியாது" என்றார்.